என்றாவது தனிமையில் இருக்கையில் எதையாவது பற்றி சிந்திக்கவோ இல்லை எழுதவோ நினைத்தால் எனக்குள் தோன்றும் இரண்டாவது தலைப்பையே பெரும்பாலும் எழுத நினைக்கிறேன்.முதல் தலைப்பு சமீப காலங்களாக "அவளை"ப் பற்றியே இருப்பதால் எடுத்த முடிவு இது. எனினும் சில மாதங்களாக எதையும் எழுதாத நான் இன்று,எழுத,அந்த முடிவே நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற நினைப்புடன், அவளைப் பற்றி மறுபடியும்.
இருபதுகளில் ஒரு ஆணின் சிந்தையில் "அவள் " என்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.அதுவும் காதலை ஒழித்து வைத்தும்,மறுக்கப்பட்ட காதலிலும் வாழும் ஆண்கள் பார்க்கும் பொருள்களும் மனிதர்களும் அவள் சார்ந்த நினைவுகளையே தரும்.
நிற்க.
நான் எழுத விழைந்த "அவள்" இவள் அல்ல .என்னவள் "மகள்".
அன்பு மகளுக்கு,
இதைப் படிக்க முடியாத,படித்தால் புரியாத உனக்கு உன் பிரியமான சித்தப்பாவின் கடிதம் இது.எடுத்து உரைக்கப்பட்ட அன்பை விட எழுதி உரைக்கபட்டவை இன்னும் ஆழமானவை.மறுபடியும் படிக்கும் வாய்ப்பும்,படிக்கும் ஒவ்வொரு முறையும் தன் உன்னதம் கூட்டும் சௌகர்யமும் எழுத்து வடிவிற்கு உண்டு.எனவே இக்கடிதம்.கடிதத்தின் நீளத்தை வைத்து அதை படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் வழக்கம் என்னைப்போல் உனக்கும் இருந்தால் இக்கடிதத்திற்கு மட்டும் விலக்கு கொடு.
எழுதுவது முடிவாகிவிட்டது.என்ன மொழியில் எழுதுவது? மொழியின் கை பிடித்து நடக்க கற்றுக் கொண்டிருக்கும் உனக்குப் புரிந்த கடவுள் மொழியில் எழுத எனக்குத் தெரியாததால் நம்மொழியில் தொடர்கிறேன்.நம்மொழியை நீ நிச்சயம் கற்றுக் கொள்வாய் என்பது அடுத்த காரணம்.
இரண்டு வருடங்களுக்கு முன், நீ வர போகிறாய் என்பது முடிவானாலும் யாராய் வருவாய் என்பது முடிவாகாத காலத்தில் உள்ளுணர்வில் நாங்கள் அனைவரும் உனக்கு பெண் வடிவமே கொடுத்தோம்.உன் பெயர் இது தான் என்று நீ பிறக்கும் முன்னரே முடிவு செய்யப்பட்டது உனக்கு தெரியுமா?
அறுவை சிகிச்சை அறையின் வெளியே கைப் பிசைந்து நின்ற நாங்கள்,உன் அழுகைக் குரல் கேட்டதும்,இலேசாக கதவு திறந்து எட்டி "பாப்பா பிறந்திருக்கிறாள்" என்று சொன்ன செவிலியிடம் முந்திக் கொண்டு உன்னைப் பார்க்க முயற்சித்ததும்,உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை செல்லமே.உன்னிடம் மட்டும் ஒரு உண்மை சொல்கிறேன்.நீ நலமாய் இருக்கிறாயா என்பது மட்டுமே என் எண்ணவோட்டத்தில் இருந்தது.அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணி என்னவானாள் என்று நான் நினைத்திடவே இல்லை அன்று.
செவிலி பெண் உன்னை ஒரு பஞ்சு துணியில் எடுத்து வெளியில் கொண்டு வந்ததும்,என் அம்மா உன்னை கைகளில் வாங்கியதும்,என்னிடம்அவள் உன்னை தர,கையில் எடுக்க எனக்கு இருந்த அச்சமும்,எடுக்க மறுத்ததும் இன்றும் ஞாபகம் இருக்குதடி சின்னவளே. அன்று நீ எப்படி இருந்தாய் தெரியுமா?இதோ.
ஏதோ ஜப்பானிய குழந்தை போல் உனக்கும் தோன்றுகிறதா உன்னைப் பார்த்தால்?
கால் நூற்றாண்டாய் பெண் குழந்தை இல்லாத நம் வீட்டிற்கு நீ கொண்டு வந்தது வெறும் வெளிச்சம் மட்டும் இல்லை கண்ணே,ஒவ்வொருவருக்கும் புது உறவு முறைஅங்கிகாரம்.என் தந்தை தாத்தா ஆனார்,அம்மா அப்பம்மா ஆனாள்.நான் சித்தப்பா ஆனேன்.என் அண்ணனும் அண்ணியும் தங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கான சான்றை பெற்றார்கள்.இந்தியாவின் இன்னும் ஒரு பெண் குழந்தை நீ, நம்வீட்டில் முதல் பொன் குழந்தை நீ தானே.
உன் தாய் வழி தாத்தா வீட்டில் நீ இருந்த முதல் 40 நாட்கள் எவ்வளவு நீளம். நிலமும் நிலவும் அந்த 40 நாட்கள் மட்டும் ஏன் மெதுவாக சுற்றியது என்று இன்று வரை பதிலில்லை.வேலை தேடுபவன் பகலும்,நோயாளியின் இரவும் போல அந்த காலம்,ஐயயோ கொடுங்காலம்.
வேலைக்கு செல்லும்போது சனி ஞாயிறுகளை மனதில் வைத்தே தொடங்கும் ஒவ்வொரு திங்கள் கிழமை போல,உன்னைப் பார்க்க வரும் தருணம் சுற்றியே மற்ற நாட்கள் ஓடும் காலம் அது.உன்னைப் பார்க்கும் தருணமும் அதில் நீ தரும் நினைவுகளும் அடுத்த முறை உன்னைப் பார்க்கும் வரை பிரிவைத் தாங்கும்.அந்நாட்களில் கடவுளை தரிசிக்க வரும் பக்தன் போலவே நம் உறவு நின்றது.
நெல்லையிலிருந்து குமரிக்கு எங்கள் குமரி வந்த காலம் தானே வசந்தகாலம்.இன்று நீயே எங்கள் நிகழ் காலமும்,வருங்காலமுமாகி வளர்ந்திருக்கிறாய்.உன்னைப் பார்க்க வந்த நம் சொந்தத்தினர் நீ உன் தந்தை போலவும்,என் தந்தை போலவும்,என் தாய் போலவும் இருக்கிறாய் என்று அவரவர்க்கு பிடித்த ஜாடை சொன்னார்கள்.
என்னைப் போலவும்,உன் இன்னொரு சித்தப்பாவைப் போலவும் இருக்கிறாய் என்று சொன்னவர்களும் உண்டு.ஒருவேளை உன் தாய் வழி சொந்தங்கள் அவர்கள் குடும்ப வழியில் உன்னை அடையாளம் கண்டிருப்பார்கள்.புரிகிறது.அந்த வயதில் நீ யார் போல் இருந்தாய் என்பதை நீயே முடிவு செய்ய இதோ ஒரு ஆணின் புகைப்படம்.
யாராய் இருப்பினும் எல்லோருக்கும் பொதுவான உருவமாய் நீ அறியப்பட்டது ஒரு தேவதையாய்.வெள்ளை நிற ஆடை இல்லை,பின்னோட்டத்தில் இசையும் இல்லை,முதுகு ஒட்டி இறகும் இல்லை,எனினும் நீ தேவதை.தேவதைக்கான அந்த அடையாளங்கள் யாரோ ஒருவரின் கற்பனைக்கான ஒப்பனை.நீ உண்மை.உன் மெய் தேவதை.
நீ பேசிய முதல் மொழி உனக்கு ஞாபகம் வருகிறதா?அது அழுகை."எல்லா குழந்தயும் பேசற மொழி தான சித்தப்பா" என்று நீ இன்று சொல்வது புரிகிறது.குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரும்பாலும் பெண்கள் அதிகமாய்,புலமையோடு பேசும் மொழிகளில் அதுவும் ஓன்று என்பது உனக்கும் தெரிய வரும்.அழுதே நீ சாதித்த காரியங்கள் எத்தனை எத்தனை.இந்த கடிதம் உனக்கு புரிய வரும் காலத்தில் நீ அழுது சாதித்தவை பல கடல் தாண்டியிருக்கும்.
நீ அழுவாய்,உடனே சிரிப்பாய்,உன் வாய் திறந்து கை சப்புவாய்,உளறுவாய்,
சிணுங்குவாய்.கை உயர்த்தி ஜாடை மொழி பேசுவாய்.குப்புற கவிழ முயற்சித்து ஒரு புறம் சாய்வாய்,அடுத்த கை வெளியில் எடுக்க முடியாமல் சாய்ந்து கொண்டே அழுவாய்.ஒரு நாள் குப்புற கவிழும் வித்தை கற்று கொண்டாய்.சிரித்த முகத்துடன் தூங்கி எங்களின் ஆயுசு கூட்டினாய் அன்று.
குப்புற கவிழ நீ கற்றதும் உன் அடுத்த கட்ட வளர்ச்சிகள் இன்னும் வேகமாகவே இருந்தன.குப்புற தரை பார்த்திருந்த நீ ஓரிரு நாட்களில் கழுத்து உயர்த்தி முகம் பார்க்கவும் செய்தாய்.அடுத்த சில வாரங்களில் உன்னை இருத்தி வைத்தால் எவர் பிடியுமின்றி நீயே சாயாது உட்கார பழகினாய்.அடுத்த முயற்சி இன்னும் சிறந்தது.நம் வீட்டு தரைகளுக்கு உரிமை கொண்டாடி தரையெல்லாம் தவழ்ந்தாய்.நீ தவழ்வாய் என்பதற்காகவே அத்தரைகள் தங்களை சுத்தமாக்கி தவமிருந்தது போல் காத்திருக்கும்.தரையை பார்த்து பொறாமையுடன் உன்னை சொந்தம் கொண்டாட அடுத்தது சுவர் காத்திருந்தது.
தானே உட்கார கற்றுக்கொண்ட நீ தூங்கி எழுகையில் அம்மாவென்று அழைத்து நீயே உட்கார்ந்தாய்.அடுத்தது சுவரையும் ஏமாற்றாமல் அதை பிடித்து நிற்கவும் கற்று கொண்ட நீ வாழ்க்கையின் நடைக்கு உன்னை தயார்படுத்தினாய்.எழுந்தாய்,விழுந்தாய்,நடந்தாய்.
முதலில் மற்றவர் உதவியுடன் பின்பு எவர் துணையும் இன்றி.இது தான் வாழ்க்கையின் தத்துவம் என்று எனக்கு நீதான் உணர்த்தினாய்.
தத்தி தத்தி நீ நடந்ததும்,விழுந்ததும் அழுததும்,
உடனே சிரித்து எழுந்ததும் இன்றும் கண்களில் பிம்பமாய் நிற்கிறதே கண்மணியே.
இவை உன் வாழ்வின் முதல் வருடம் தான்.இன்னும் எழுத ஒரு முழு வருட நிகழ்வுகள் உண்டு.மெதுவாய் தொடர்கிறேன்.
இப்படிக்கு,
ராஜுப்பா.