Saturday, December 15, 2012

மகள் புராணம்


தன் இரு விரல்களின் இடையில் திருநீறு எடுத்து,கண்களை மூட சொல்லி,நெற்றியின் நடுவே அவள் வைக்கும் போது,எனக்கு மட்டும் அல்ல,கார்ல் மார்க்சுக்கு கூட கடவுளிசம் பிடிக்கும்.

                       

*********************************************************************
 என்னோடு நடக்கையில் என்  ஆள்காட்டி விரலை தன் ஐந்து விரல்களால் இறுக பிடித்து,தெரியாத முகம் யாராவது அவளை பார்த்து சிரித்தால் என் கால்களுக்கு இடையில் தஞ்சம் தேடும் போது , என் மீது எனக்கே நம்பிக்கையை தருகிறாள்.

**************************************************************************

கடுகை "அகுது" என்றும்,மத்தாப்புவை "அப்பாத்து" என்றும்,என்றோ பார்த்த யானையை "நேற்று நான் பார்த்தேன்ல அந்தததததத  யானையா ?" என்றும் சொல்லும் அவள் மழலை சொல்லின் இலக்கண பிழைகளும்,சொல் பிழைகளும்  தமிழின் புதிய இலக்கணமாய் மாறுகிறது.

************************************************************************
பல்லியின் வாயில் அகப்பட்ட பூச்சிக்காக ஏங்கும் போதும்,

மழையில் நனையும் தெருவோர நாய்க்குட்டியின் "அம்மா DOG எங்கே"?அதுக்கு யாரு மம்மம் ஊட்டுவா? என்று கேட்கும் போதும்,

SUN ஏன் வெளில வெயில இருக்குது? அதுக்கு கசகசன்னு இருக்குமோ? என்கிற  போதும்,

உளவியலையும்(psychology) அறிவியலையும் ஒரு சேர அவளே உணர்த்துகிறாள்.

****************************************************************************

ஆடை குறைப்போடு இருக்கும் நடிகர் நடிகை புகைப்படங்களை பார்க்கும் போது "ஐயய,இந்த Uncle Dress Change பண்ணல,SHAME SHAME ! " என்று சிரிப்பாள்.




****************************************************************************

பயணங்களின் போது எதிர் வரும் மலையை பார்த்து,Mountain என் கூடவே வருது என்று அழுது, அவள் தந்தையின் கைகளை பற்றி கொண்டு,"Mountain போ,எங்கப்பாட்ட சொல்லி கொடுத்துலுவேன் " என்று அவள் தந்தையை மலை  விழுங்கியாய் ஆக்குவாள்.

****************************************************************************

எதிர் வீட்டில் இருக்கும் எங்களுக்கு எதிராய் செயல்படும் ஒருவரின் வீட்டு கொடியில் தொங்கும் அழுக்கான வேட்டியை  பார்த்து "Dirty யா,இருக்கு.New Dress வாங்கி கொடுப்போமா?" என்கிறவள்,பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று எங்களுக்கும் மெய்ஞானம் கற்பிப்பாள்.

****************************************************************************

 சுவரில்அவள் கிறுக்கல்களும்,ஆங்கில அகராதியில் (Dictionary) பூச்சாண்டி என்று சொல்லி அவள் வரைந்த இரண்டு கோடுகளும், மடிகணினியின் விசைதட்டிலிருந்து (Laptop Keypad) பெயர்த்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களும் அவள் மலழை அடையாளமாய் கோபமின்றி எங்கள் வீட்டில் இருக்கிறது.

***************************************************************************

ஐஸ் கிரீம் வாங்கி தரவில்லை என்றால் வானம் பார்த்து "சாமி , ஆஜுப்பா(நான் தான்) சொன்னாவே கேட்க மாட்லான், நீ Note பண்ணிக்கங்க.அப்புறமா Punish கொடுங்க  ன " என்று கடவுளுக்கு வேலை கொடுப்பாள்.

****************************************************************************

அவள் தாய் வீட்டுக்கு சென்றால் "ஸ்தோத்திரம்,அல்லேலூயா,ஏசப்பா" என்று பிரார்த்தனைக்கு மண்டியிட்டு தயாராகும் அவள், எங்கள் வீட்டில் இருக்கையில் என் அம்மாவுடன் சேர்ந்து "ஓம் சக்தி,பிள்ளையார் சாமி"
என்று விளக்கேற்றி பூஜைக்கு தயாராகி, தன்னை இடம் பார்த்து பொருத்தமாக்கி கொள்கிறாள்(adaptation).

****************************************************************************

கடந்த 27 வருடங்களில் எனக்கு என் பெயர் உபயோகப்பட்டதை விட அதிகமாய் சென்ற 6 மாதங்களில் அவளுக்கு உபயோகம் ஆகிருக்கிறது.

**************************************************************************** 

No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...