Saturday, March 23, 2013

மகள்களுக்கு

உயிர்மெய்களுக்கு,
           உங்கள் சித்தப்பாவின் இரண்டாவது கடிதம்.முதல் மடல் மூத்தவளுக்கு.இரண்டாவது இருவருக்கும் சேர்த்தே.

அன்போ,அறிவோ

பண்போ ,பரிவோ

பணிவோ,துணிவோ

இனி எதை தருவதாய் இருந்தாலும் இருவருக்கும் சேர்த்தே தருவதாய் நாம் முடிவு செய்திருக்கிறோம்.ஒருவளை மட்டும் தூக்கி வைத்தால், என்னையும் தூக்குங்கள் என்று அடுத்தவளும் கைகள் விரித்து சொல்லி ,இரு கைகளிலும் எங்கள் எதிர்காலங்களை தூக்கும் சுகத்தை தந்ததால், இது நாம் எடுத்த முடிவு தான். அவ்வாறு தூக்கி, நாம் மூவரும் சூரியனை பார்த்த போது கண் கூசியது சூரியனுக்குமாக  இருந்திருக்கலாம் .அது வேற விடயம்.

கடிதம் எழுத முடிவாகிற்று,என்ன எழுதுவது? இந்த காரணத்திற்காக கடிதம் எழுதுகிறேன் என்று சொல்லி கடிதம் எழுதும் கட்டுப்பாடும்,வரைமுறையும் நமக்குள் இல்லாததால் எதையாவது பேசலாம் என்று நானே  முடிவு செய்திருக்கிறேன். உங்கள் முதல் வருடத்தின் இரண்டாவது பாதியில் உங்கள் நா பேச முனைந்த வார்த்தைகள் போல.

இன்று, இளையவளை சில நிமிடங்கள் கண்காணிக்கும் சுகத்தை ஏற்றுக்கொண்டேன்.தீக்ஷா, நீ அந்த சில நிமிடங்களில் சொல்லி கொடுத்த நித்திய சித்தாந்தங்கள் எத்தனை தெரியுமா.

சிரிப்பு,அழுகை

சோகம்,கோபம்

எதுவாய் இருந்தாலும்

அந்த கணம் தான்.

உன்னை மனம் குளிர்ந்து சிரிக்க வைக்க எந்த செலவும் இல்லை. தலைக்கு மேலாக,கைகளால் தூக்கினால் போதுமானது.கீழிருந்து மேல் போகும் போது சிரிக்கிறாய்.மறுபடியும் இறங்கும் போது சிரிப்பு சிறைபடுகிறது.அழுகையும் அப்படிதான்.

புதிதாய் ஓர் இடம் நீ கண்டால், உன் மகிழ்ச்சிக்கான மதில் சுவர் இருந்ததாய் நான் பார்த்திடவில்லை.அவ்விடத்தில் இருக்கும் பொருள்களும் அதற்கான சிறப்பும் உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.ஊர்ந்து போகும் எறும்பு முதல் .............................................

அந்த நிமிட வாழ்க்கைக்கு உங்களை யார் பழக்கியது.என்னால் தான் இதை செய்யமுடியாமல் போகிறது.இறந்த காலத்தின் சோகம்.கோபம்,பகை,சூழ்ச்சி,
துரோகம்,காயம்,தோல்வி எதையும் மறக்க முடியாமலும், வருங்கால வாழ்க்கைக்கான சுகம்,பதவி,பொருள்,வசதி,நிம்மதி என்று முடிவு பெறாத தேடல்களிலும் எங்கள் நிகழ் காலம் எங்களிடமே அடமானமாய் இருக்கிறது போலும்.நீங்கள் தான் இதை என்னக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.


உங்கள் வாழ்க்கையோடு

நானும் தொடர்வேன்....

No comments:

Post a Comment

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...