Monday, February 20, 2012

நம்பினால் நம்புங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோயிலில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓர் ஊர் அது.கன்னியாகுமரி மாவட்டம் பற்றி முழுமையாக அறியாதவர்கள் இன்று வரை நாகர்கோயில் நகரம்,சுற்றுலா தளமான கன்னியாகுமரியை விடவும் சிறிய ஊராகவே நினைத்துக் கொள்கிறார்கள்.இனி அவர்கள் தங்களை திருத்திக் கொள்ளவும்.

 என்றுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த ஊரின் ஒரு குறுக்கு சந்தின் முனையில் அமைந்திருக்கும் அந்த வீடு அந்த சந்தின் மொத்த அடையாளமாய் இருக்கிறது.அவ்வீட்டின் வாசலில் வரிசையில் நிற்கும் மக்கள் தங்கள் கைகளில் முட்டையும் அகர்பத்தியும் ஒரு காகிதத்தில் பொதிந்து வைத்திருக்கிறார்கள்.முட்டையும் பாலும் என்ற இணையை  அதிகம் அறிந்திருந்த எனக்கு முதல் முறை இந்த இணை ஆச்சர்யமாகவே இருந்தது.

வாழ்க நலமுடன் என்று வரவேற்கும் அந்த வீட்டின் முன் நிற்கும் அம்மக்கள் பல சமய மத சித்தாந்தங்கள் சார்ந்தவர்களாக தெளிவாக அடையாளம் தெரிகிறார்கள்.உடையாலும் உறுப்புகளின் அணிகலன்களாலும் ஒருவர் சார்ந்திருக்கும் மதத்தை பெரும்பாலும் இன்றும் நாம் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாகவே  நான் கருதுகிறேன்.எனினும் சுதந்திரத்திற்கு முன் வங்காளத்திலும் பின்னர் 1990களில் உத்திர பிரதேசத்திலும் மும்பையிலும் தமிழ்நாட்டின் கோவையிலும் இல்லாத மத நல்லிணக்கம் அங்கு இருந்ததாக காணப்பட்டது மகிழ்வுக்கு உகந்ததே.
 
ஆண்கள் பெண்கள் என்ற தனி வரிசை இல்லாமல் இருந்த அந்த வாசலில் எல்லா வயது பிரிவினரும் தென்பட்டார்கள் எனினும் குழந்தைகளை கையில் ஏந்தியபடி நின்றிருந்த இளவயது தாய்மார்களே அதிகம்.நியாய விலைக் கடைகளில் அநியாயமாய் கொள்ளை போகும் தங்கள் நியாயங்களுக்காக வரிசையில் காத்து நின்று பழக்கப்பட்ட கடை நிலை நடுத்தர மக்கள் போல காத்திருக்க அவர்கள் தயாராக இருந்தார்கள்.தெளிவாகக் கூறின்,காத்திருந்து தங்கள் காயங்களை ஆற்றிக்கொள்ள அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டார்கள்.

சுமார் பதினோரு மணி அளவில் உள்ளே வந்த அவர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே சன்னல் வழியாக வெளியில் இருக்கும் கூட்டத்தை பார்க்கிறார்.அவரது முக அசைவுகளில் அதிகமாக இருக்கும் கூட்டத்தை பார்த்த மகிழ்ச்சியும் அதற்கே உண்டான வருத்தமும் கலந்து இருந்தது.அவர் தலைக்கு மேலே இருந்த சிறிய பலகை அவரை 'ஓதுபவர்' என்ற பட்டத்துடன் அவர் தம் பெயரையும் வெளிப்படுத்தியது. 


முதல் ஐந்து பேர் உள்ளே அழைக்கப்பட்டு ஓதுபவர் ஓரத்தில் இருக்கும் மரப்  பலகையில் உட்காருகிறார்கள்.முதலில் கைக்குழந்தையுடன் சென்ற பெண் அவரின் எதிரே இருந்த நாற்காலியில் அமருகிறார்.

தன் குழந்தை ஒரு வாரத்திற்கு மேலாக ஒழுங்காக சாப்பிடுவது இல்லை எனவும் கொதி விழுந்து விட்டதாகவும்  கூறுகிறார்.அவளிடம் முட்டையும் பத்தியையும் பெற்று கொண்ட ஓதுபவர்  ஏதோ மந்திரங்களை உச்சரித்தவராக முட்டையை வைத்து குழந்தை மேல் தடவுகிறார்.பின்னர் முட்டையை அருகில் இருந்த ஒரு பெட்டியில் வைத்துவிட்டு அங்கிருந்து தண்ணீர் எடுத்து அந்த குழந்தையின் முகத்தில் தெளிக்கிறார்.குழந்தைக்கு கொடுக்கப்படும் பாலுடன் இருந்த பால் குப்பியை கேட்டு பெற்றுகொண்டவராய் அதில் மூன்று முறை தனது எச்சில்லை துப்புகிறார்.இதற்கான கூலியாக 50 ரூபாய் பெற்று கொண்டதும் அடுத்தவர் உள்ளே அழைக்கபடுகிறார்.

அடுத்து வந்தவர் தன் குழந்தைக்கு உடலில் புண்கள் இருப்பதாக சொல்லவும் அவருக்கும் இது போல முட்டை தேய்த்தல் வைத்தியம் தொடர்கிறது.இப்படி பெரும்பாலும் குழந்தையுடன் வந்தவர்களுக்கு இந்த வைத்தியம் தொடர்ந்தது.


இதற்கிடையில் ஒரு பெண்மணி தான் கையில் வைத்திருந்த முட்டையை கீழே தவற விட ஓதுபவர் சினங்கொண்டவராய் அவரை ஒருமையில் கோபிக்கிறார்.இனி எத்தனை சாத்தான்கள் இங்கே வர போகிறதோ தனக்கு தெரியவில்லை,அவை முட்டையில் எளிதாக பரவக்கூடும் என்று அங்கு  இருப்பவர்களின் தைரியத்தை சோதிக்கிறார் ஓதுபவர்.


விழுந்த முட்டை அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடம் சுத்தப்படுத்தும் வரை மயான அமைதி அங்கு நிலவியது.அடுத்து ஒரு பெண் சுமார் 25 வயது மதிக்க தக்க தன் மகளுடன் அவர் எதிரே உட்காருகிறார்.தன் மகள் யாரிடமும் கடந்த சில மாதங்களாக தெளிவாக பேசுவதில்லை என்றும் பெண் பார்க்க வந்தவர்களிடம் கோபித்து கொள்கிறாள் என்றதும் இதனால் அவளுக்கு திருமணம் தடைபடுவதாக கூறுகிறாள்.


முட்டையை வாங்கி தேய்க்க தொடங்கிய ஓதுபவர் தீடிரென்று குனிந்திருந்த அந்த பெண்ணின் முகத்தை உயர்த்துகிறார்.அவள் சற்றே ஏளனத்துடன் சிரித்தவளாக அவரைப் பார்க்கிறாள்.கண்ணை மூடி மந்திரம் உச்சரிக்க அவர் தொடங்கியதும் அந்த பெண் திமிரியவளாய் "டேய்! என்னை விடுடா,ராஸ்கல்" என்கிறாள்.ஏற்கனவே பயந்திருந்த சுத்தி இருந்தவர்கள் இந்த வார்த்தைகளால் இன்னும் முகத்தில் பயத்தை தெரியப் படுத்தினார்கள்.


ஓதுபவர் வேகமாய் உச்சரிக்க அந்த பெண் "ப்ளீஸ்,என்ன விட்டுடு" என்கிறாள்.ஓதுபவர் அவளிடம் சரி உன்னை நான் விட்டு விடுகிறேன்,இன்னும் 5 நிமிடங்களில் நீ இந்த உடலை விட்டு போய்விடு என்கிறார்.சில நிமிட அமைதிக்கு பின் அந்த பெண் மறுபடியும் சிரிக்க,ஓதுபவர்   உரத்த குரலில் "உன்னை போல் ஆயிரம் பேரை கண்டவன் நான் என்னிடமே உன் விளையாட்டா?" என்கிறார்.எதிரில் இருந்து மறுபடியும் ஏளன சிரிப்பு.


அருகில் இருந்து ஒரு நீண்ட தட்டையான மர அளவுகோலை(நடராஜ் wooden Scale) கையில் எடுத்து கொண்ட ஓதுபவர் அந்த பெண்ணின் தலை முடியை முதலில் பிடிக்கிறார். அவளின் நிமிர்த்தி வைத்த கைகளில் தொடர்ந்து அவர் அடித்துக்கொண்டே "யார் நீ?" என்கிறார்.எதிர் முனையில் அழுகை சத்தம் வர,யாரென்று பார்த்தால் அந்த பெண்ணின் தாயார் மகளின் நிலைக்கண்டு அழுகிறார்.மர பலகையில் இருந்தோர் அனைவரும் பயத்துடன் அவளை பார்க்கிறார்கள்.எனினும் அந்த இளம் பெண்ணின் அழுகை குரலோ வலித்ததாய் வெளிப்பாடோ அவளிடம் தெரியவில்லை.  

நேரம் செல்ல செல்ல தன் கேள்விக்கு பதில் இல்லாததால் ஓதுபவரின் அடியின் வீரம் கூடுவதை உணர முடிந்தது."நான் பாஸ்கர்.அடிக்காதீங்க ப்ளீஸ்" அந்த பெண் சொல்கிறாள்.ஓதுபவர் முயற்சி விடாதவராய் "எப்படி இவள் உடலில் வந்தாய்?" என்கிறார்.அதற்க்கு அவள் "மாலை 6 மணி அளவில் ஒரு நாள் இவள் மல்லிகை பூ வைத்து சாலையில் வந்தாள் " என்கிறாள்.

"ஏன் வந்தாய்?" என்ற அவர் கேள்விக்கு அது "தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,தனது காதலி வீடு அருகில் இருப்பதால் இவள் உடலில் வந்ததாகவும்,தன் காதலியை பார்த்து பேச வேண்டுவதாகவும் " சொன்னது.பயத்தை அளக்கும் கருவி இருந்திருந்தால் அருகில் இருந்தோர் இந்த கணம் பயத்தின் உச்சியை அந்தக் கருவியில் காண்பித்திருப்பார்கள்.ஓதுபவர் மறுபடியும் முட்டையை உடைத்த அந்த பெண்மணியிடம் "பார்த்தியா,நான் சொன்னேன் இல்ல.சாத்தான் சுத்துறான் "என்கிறார்.எனினும் இந்த கணம் அவர் சாதித்தது போல் முகம் கொடுத்தார்.


அவளின் முடியை இன்னும் இறுக்கி பிடித்தவராய்,ஓதுபவர் அடியின் வீரியத்தை கூட்ட அந்த பெண் ஓவென்று அழுகிறாள் திடீரென.எல்லாம் முடித்தவராய் அந்த பெண்ணின் தலையில் இருந்து இரண்டு நீண்ட முடிகளை பிய்த்து சுருட்டி வைத்து தன் அருகில் இருந்த ஒரு கருப்பு கயிற்றை அவள் கையில் கட்டுகிறார்.அந்த பெண்ணும் தொடர்ந்து அழ,அவளிடம் "தான் யார்?" என்கிறார்.அவள் "நான் டைசி"என்றதும்,அவள் தாயார் சில நூறு ரூபாய் நோட்டுகளை ஓதுபவுருக்கு கூலியாக்கினார். 

வழக்கம் போல் அடுத்தவர் அவர் எதிரே வந்து உட்கார,வெளியில் இருந்த நான் அறிவையும் அறிவியலையும் ஒதுக்கி வைத்துவிட்டு பயத்துடன் ஓதுபவரை பார்த்து கொண்டிருந்தேன். 

  

3 comments:

  1. Rajiv... Nee eduku pa anga pona... I too was on ce taken there.. as I used to get snakes in my dreams... which spoiled my sleep for many nights... Asusual with his prayers, he tied a black rope in my hand... May be because of some belief, after that I had some good sleep.. Thanks, Fouzan ... :)

    ReplyDelete
    Replies
    1. Fouzan,naanum angae Kayiru kettirukken.--Rajeev

      Delete
  2. Dei nee ethuku anga pona ....

    Veetla enna nadakuthunu konjam sollunga pa ...

    ReplyDelete

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...