சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட, வாக்களித்ததின் அடையாளமான "கறை படிந்த" இடது ஆட்காட்டி விரல்களின் புகைப்படங்களை பார்த்த சாஸ்த்ரி தன்னுடைய முதல் ஓட்டு போடும் நிகழ்வை பற்றி சிந்திக்கலானான்.
"18 வயசு 19 வயசு பசங்களும் பொண்ணுங்களும் அவங்க போட்ட முதல் ஓட்ட போட்டோ எடுத்து போட்டுருக்காங்க, ஆனா நாங்கலாம் அதுக்க முன்னாடியே ஓட்டு போட தயாராகிட்டோம்ல " என்று தனக்குள் கூறிக்கொண்டு தானாகவே சிரித்தும் கொண்டான் சாஸ்த்ரி .
மறக்க முடியாத அந்த நிகழ்வு அவனுக்குள் மறுபடியும் ஓட தொடங்கியது. கூடவே ஒரு விதமான கோபமும் ஆனந்தமும்.
1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் அது. வாக்களிக்கும் நேரம் முடியும் 30 நிமிடங்களுக்கு முன்னர்,
"லேய் தம்பி , நீ இங்க வா " என்று ஜெகத்திரு-பாலன் அண்ணன் அழைக்க,
அவன் தெருவில் வசிக்கும் சக நண்பர்கள்,தன் இரு சகோதரர்கள் சூழ சாஸ்திரியும் வாக்குச் சாவடி நோக்கி நடை போட்டான்.
போகிற வழியில் பாலன் அண்ணாச்சி
"லேய் எல்லோரும் பூ சின்னத்துக்கு போட்ருங்க உங்க வோட்ட,என்ன "
என்று அதட்டினார் . கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் ஒரே ஆனந்தம், ஓட்டே இல்லாத தாங்கள் ஓட்டு போடபோகும் தருணம் எண்ணி.
13 வயதே ஆன சாஸ்த்ரி தான் அந்த கூட்டத்திலே சிறியவன் .தானும் ஓட்டு போட போகிறோம் என்ற பூரிப்பு அவன் மனதில் எல்லையில்லா ஆர்ப்பரிப்பை உண்டாக்க அண்ணாச்சி நோக்கி கேட்டான்,
" நானுமா? "
"நீயும் தாண்டே" என்றார் அண்ணாச்சி .
" லேய் தம்பி, நாமலாம் 'அய்யா வழி' சாமி கும்பிடுறவங்க. பூக்கு தான் அதனால நம்ம ஓட்ட போடனும்ல , சரியா? " என்றார் அவர் .
சாஸ்த்ரி அதிகம் சிந்திக்காதவனாய்
"அண்ணாச்சி, நானும் 'ஐயா' வழி தான். எங்க அப்பா வழி.
எங்கம்மாவ அப்பா 'விரல்' சின்னத்துக்கு தான் ஓட்டு போட சொன்னாங்க .
நானும் அப்பா சொல்லத தான் கேப்பேன் " என்றான் அடம் பிடித்தவனாய்,
ஓட்டு சாவடி அருகில் வந்ததை கூட மறந்து விட்டு .
வாக்குச் சாவடிக்கு வெளியில் நீண்ட வரிசையில் இன்னும் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.பாலன் அண்ணாச்சி நேராக உள்ளே சென்றது அவனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .
விடுமுறை கழிந்து பள்ளிக்கூடம் மறுபடியும் போனதும் தன் நண்பர்களிடம் பாலன் அண்ணாச்சி வரிசையில் நிற்காததை பற்றியும்,தன் கை விரல்-மை காட்டி தான் ஒட்டு போட்டதை பற்றியும் சொல்ல வேண்டும் என்று, ஒட்டு போடும் முன்னரே முடிவு செய்து விட்டான் சாஸ்த்ரி. அவர்கள் ஆச்சர்யத்துடன் அவனை அன்னாந்து பார்ப்பார்கள் என்று நினைத்த பொது அவனுக்கு சில நிமிடம் மிக்க கெளரவம் வந்து விட்டு சென்றது.
எனினும் ஓட்டு போட இன்னும் சிலர் வரிசையில் நின்றது அவனுக்கு
கோபத்தை உண்டாக்கியது. சற்றே நீண்ட அந்த வரிசையில் தனக்கான வாய்ப்பு நினைந்து ஆவலுடன் தானும் காத்துக்கொண்டிருந்தான்.
இடையிடையில் இன்னும் எத்தனை பேர் தனக்கு முன்னால் நிற்கிறார்கள் என்று விரல்களால் எண்ணிக் கொண்டு, எண்ணம் குறைய குறைய திகைப்போடு காணப்பட்டான்.
இதற்கிடையில் ஓட்டு போட்டு வெளியில் வந்த 11-ம் வகுப்பு படிக்கும்
ஸ்டீபன் அண்ணனிடம்,
" யன்னேன், யானே உங்களுக்கு மை வைக்கல கைல? " என்று வினவினான். பதில் சொல்லாத ஸ்டீபன் அண்ணன் கம்பீரமாய் புன்னகையுடன் நடந்து சென்றது அவனுக்கு மேலும் ஆசையை தூண்டியது.
கூட்டம் குறைய குறைய சாஸ்திரிக்கு ஆனந்தம் கூடியது. தானாகவே சிரித்தான். தான் சிரிப்பதை உள்ளே இருப்பவர்கள் கவனிப்பது அறிந்து சில சமயம் குனிந்து,வாய் பொத்தி சிரித்தும், சிரிப்பை அடக்கிகொண்டும் காத்திருந்தான்.
அவன் எண்ணம் நிறைவேறும் தருணம் வந்தது.
"இன்னு கொஞ்ச நேரம் தாம்டே இருக்குது.சீக்கிறோம்"
என்று பாலன் அண்ணாச்சி வேகம் காட்ட, அவனுக்கான வாய்ப்பும் வர சாஸ்த்ரி வாக்குச் சாவடி உள்ளே சென்றான்.
"யாரு , இந்த பையனா? ,முடியவே முடியாது, சார் " என்று உள்ளே இருந்து ஒரு குரல் எழும்பியது.
"இவன் 'பகதூர் சாஸ்த்ரி' சார். என் கிளாஸ்-ல படிக்கறான்.
ஒரு மனசாட்சி வேணாமா ? 9-ம் வகுப்பு பையனலாம் என்னால
அனுமதிக்கமுடியாது " என்று கோபத்துடன் மேலும் ஒலித்தது அந்த குரல்.
பாலன் அண்ணாச்சிக்கும் உள்ளே இருந்தவர்களுக்கும் வாக்கு வாதம் நடந்தது மட்டுமே சாஸ்த்ரியின் கண்களுக்கு தெரிந்தது எனினும் தெளிவாய் புரியவில்லை .
உள்ள இருந்த இன்னோருவர், "தம்பி பாலன் , அவன வெளில அனுப்புங்க " என்றார். பாலன் அண்ணன் பல முறை வேண்டி பார்த்தும் அதிகாரிகள் விடுவதாய் இல்லாததால் , சாஸ்திரியை பாலன் அண்ணனே வெளியில் கூட்டி வந்து ஆறுதல் சொன்னார்.
அவன் அழுவதை கண்டு அவன் கையில் சில சில்லறைக் காசுகளை திணித்து அருகில் இருந்தவனிடம் சாஸ்திரியை அவன் வீட்டில் விட சொல்லி விட்டு,
அவர் மறுபடியும் வாக்குச் சாவடி உள்ளே சென்றார்.
வீட்டுக்கு வந்ததும் " யாம் மக்ளே அழுற ?" என்று அவன் அம்மா கேட்டது மற்றும்
"ஐய்யா, நாங்க ஒட்டு போட்டோமே " என்ற அவன் அண்ணன்களின் ஓட்டு போட்ட கம்பீர அளப்பரையும் அவனுக்கு மேலும் அழுகையை தூண்டியது.
தன்னை ஓட்டளிக்க விடாத ஆசிரியர் மீது கோபம் இதனால் இன்னும் கூடிற்று சாஸ்திரிக்கு.
" 'அய்யா ' சாமி, சுப்பையா சாருக்கு தலைல முடியே வளர கூடாது. அவரோட பைக் பஞ்சராகி அவரு ......." இன்னும் அதிகமாய் அவன் குல சாமியிடம் கோரிக்கை மனுவளித்தான் சாஸ்திரி.
திடீரென "க்கீங் க்கீங் க்கீங் க்கீங் " என்று எதோ ஒலி எழும்ப,
"ஏய் அபி , லேப்டாப் சார்ஜெர் எடுத்துட்டு வா சீக்றோம்.சார்ஜ் down ஆய்டிச்சு ....சீக்கிறோம் " என்று கட்டளையிட்டு, தற்கால சகஜ நிலைக்கு வந்தான் சாஸ்த்ரி.
" இவுரு வேற,ரொம்ப நாள் கழிச்சு நானே இப்போ தான் எங்கம்மா-அப்பாவ பார்க்கிறேன். கொஞ்ச நேரம் பேச விட மாட்டாரு... அத எடு இத வை-னுட்டு ..." என்று புலம்பலுடன் adapter-ஐ எடுத்து வந்து கணவனிடம் கொடுத்தாள் அபி.
இதற்கிடையில் காடு சென்று திரும்பிய தன் விவசாயி-மாமனிடம்
"என்ன மாமா, யாருக்கு ஓட்டு போட்டீங்க ?" என்றான் சாஸ்த்ரி.
"இதுல உங்களுக்கு என்ன சந்தேகம் மாப்பிள-தம்பி.
நாம 'அய்யா வழி'-ல. பூ -க்குத்தான் போட்டேன்" .
மேலும் அவர் , மை படிந்த தன் கை விரல் உயர்த்தி,
" அண்ணாச்சி நம்ம சொந்தம்லா, அவர விட்டு மாற்று ஆளுக்கு போடுவேனா........." நிற்காமல் அடுக்கி கொண்டிருந்தார் மாமனார்.
அவர் பேச்சு 'ஜெகத்திரு பாலன்' அண்ணனை நினைவு படுத்தியது சாஸ்திரிக்கு. கூடவே சுப்பையா சாரும் நினைவுக்கு மறுபடியும் வந்தார்.
" பாலன் அண்ணன் இப்போது ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளராவும், MLA-வாவும் இருக்கறாரு."
" சுப்பையா சார் தான் என்னன் ஆனாருனு தெரில . ஒருவேள எங்காவது தலைமை ஆசிரியரா இருக்கலாம் retire ஆகலனா.... "
" ஆனா ஒன்னு என்ன ஓட்டு போடா விடாத அந்த நாள் நிச்சயம் அவரு நல்ல தூங்கிருப்பாரு. "
" Booth-capture பண்ணப்பட்ட அவரு இருந்த அந்த வாக்கு சாவடில, தன்ன ஓட்டு போடா விடாததனால,அவரால முடிஞ்சது ஒருத்தரையாவது
கள்ள-ஒட்டு போடாம தடுத்தொம்னு அவருக்கு ஒரு மன திருப்தி இருந்திருக்கும்."
சாஸ்த்ரி தனக்குள்ளே பேசிக்கொண்டான் .
அவருக்கு கெட்டது நடக்க வேண்டி தான் சாமியிடம் அன்று வேண்டியது
இப்போழுது நினைக்கையில் அவமானமாகவும், சிரிப்பு வர வைப்பதாகவும்
தோன்றிட்டு சாஸ்திரிக்கு இன்று.
எனினும் அரசாங்கத்தால் வாக்களிக்க ஏதுவாறு கொடுக்கப்பட்ட
வியாழ-கிழமை விடுமுறை நாளன்று, மனைவியின் வற்புறுத்தலால், அதை நீண்ட விடுமுறை வாரமாக மாற்றி, வாக்களிக்காமல்,
வரும் ஞாயிறு மாலை வரை மாமனார் வீட்டில் தங்க தானே முடிவு செய்தது, அவன் மனதை கொஞ்சம் தைத்தது.
அவன் மனதில் இந்த கறை படிந்தது . இன்று இரவு தூக்கம் வருமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான் .
No comments:
Post a Comment