பூட்டிக்கிடக்கும் நம் வீடு,
புடவைக் கட்டிய வயதான
தாய்மார்
கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி ,
'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள்
பதற்றத்துடன் கடந்த பாவூர்ச்சத்திர சாலை ,
அவசர ஊர்திக்கு
ஒதுங்கிடும் கணவேளை
ஒற்றை வரிசையில் ஏற்றும்
ஊதுபத்தி,
மகள்கள் இட்டுவிடும்
நெற்றி விபூதி
உபயோகிக்காத ரேஷன் அட்டை,
பொங்கலுக்கு கொடுத்த ஓட்டுக்கு
பணம்
நடக்கவிருக்கும் மருமகள் திருமணம்,
தவறிப்போன சில நெருங்கிய உறவுகள்
மகள்கள் பெற்ற வெற்றிப் பரிசு,
பகிரப்பட்ட குடும்ப புகைப்படம்
வாங்கித்தராத தங்க நகை,
வேண்டாம் என்று ஒதுக்கிய
நான்காவது பூரி
காரணமின்றி பேச கிடைக்காத குரல்,
காரணமே இருந்தும் பேச முடியாத
தேடல்
தனியாய் சென்ற பேருந்து பயணம் ,
பெருமூச்சில் கடந்திடும் சில பொழுது
நீரின்றி அமையா உலகு ,
நின் நினைவோடு நிறையாத வாழ்வு .