Tuesday, January 31, 2012

பயத்துடன் உன் நண்பன்

mansion இல் இருந்தாலும்
மாளிகையாய் வாழ்ந்தோமே

உணவுக்கே வழியில்லை
'தம்'முக்கு தடையில்லை
ஒரு 'தம்'மில் பல நாட்கள்
உணவாக உண்டோமே

வேலையோடு வரும் நண்பன்
தருவானே முழு இன்பம்
குவாட்டரும் கும்மாளமுமாய்
மறந்திடுமா உனக்கு மட்டும்? 

வேலையில்லா பட்டதாரிக்கு
உதவித்தொகை வழங்கியது
பெட்டிக்கடை பாய் தானே

வறட்சிக் காரணமாய்
வாரா நம் கடன்களை
தள்ளுபடி செய்த
வள்ளலும் அவர் தானே

அருகிலிருந்த திருமண மண்டபம்
அழைக்காத வீட்டிற்க்கும்
அன்போடு (மட்டும்) போவோமே
"யாதும் ஊரே,யாவரும் கேளிர்"
புரிந்தவர் நீயும் நானும்.

அக்காவின் திருமணத்திற்கு 
பக்காவாய் புறப்படுவோம்
பல வாரம் முன்னாலே
பேருந்தின் பின் சீட்டில்

விமானத்தில் பறக்க முடிந்தும்
நேரமில்லை என்பேனே
இன்று உன் மின்னஞ்சல் 
அழைப்பு பார்த்தும்    

சென்னை தமிழில்
செழுமையான உரிமையுடன்
கோபித்தோம்  நாம் அன்று
"Hey Buddy" என்றாலும்
உயிரில்லை பேச்சில் இன்று

அன்று
பாக்கெட்டில் பணமில்லை
இருந்தும் பயமில்லை

இன்று
நேரமும் நேர்மையும்
நெருங்கவே முடியாத
பல மடங்கு கடமையுண்டு
பக்கெட் நிறைய பணமுண்டு

மொத்தத்தில் பயமுண்டு.

Monday, January 30, 2012

what is காதல்?

என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்
அது நம் காதல் தானே
நண்பா.

நீ இல்லாமல் 
எனக்கேது காதல்?

காதலியை மட்டுமல்ல
காதலையும் சேர்த்தே
எனக்கு அறிமுகம் செய்தவன்
நீதானே?

"கிட்டத்து பார்வை" பாவை அவள்,
முதல் பெஞ்சின் நெருங்கிய தோழி.  
எங்கோ தூரத்தில் "மாப்பிளை பெஞ்சில்"  
உன்னோடு நான்.

திரும்பும் அவள் 
தன் தோளைப் பார்த்தாலும்
தோழியைப் பார்த்தாலும்
அவள் தன் கூந்தலின்
பொடுகையே பார்த்தாலும் 
"மச்சான்,உன்ன பார்க்றாடா அவ"
என்று அசராமல் சொல்வாயே.

பொய்யாக இருந்தாலும்
சௌகர்யமாய் இருந்தது
பிடிக்கவும் செய்ததே.

என்னிடம் அவள் பேசும்போது
வெட்கப்பட்டாள் என்றாய்.
"நாணம் பெண்ணின் முதல் மொழி" என்று 
நீ கவிஞன் ஆனாய். 
நான் அவள் ரசிகன் ஆனேன். 

"உன்ன follow பண்றா மச்சா"
நீ சொன்ன போது
தெரியாமல் போனதே
நான் நின்றது
வகுப்பறை வாசல் என்று.


என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்
அது நம் காதல் தானே
நண்பா.

நீ இல்லாமல் 
எனக்கேது காதல்?


ஓரிரு நாட்கள்
ஒரே நிறத்தில்
அவளும் உடை அணிய
"சத்தியமா சொல்றேன்,தெய்வீக காதல்"என்றாய்.      
காற்றில் மிதந்தேன்
ஆக்சிஜன் குறைவதும்  புரியாமல்.

அவளின் முகம்
என் கணினியின் முகமாக்கி
"Romantic Look da"
நீ தான் சொன்னாய்.
முழித்திருக்க கூடாதா?
முட்டாள் நான்.

சரி,தெளிவான அறிகுறிகள்,
இது தான் காதல் என்று
அவளிடம் சொன்ன போது
எது தான் காதலென்று
அவளும் சொல்லவில்லை

இருந்தாலும்
கேவலமாய் சொன்னாளே
அதுக்கூட மறந்ததடா

"மச்சான்,
Shift + Del, சிம்பிள்டா"
நீ சொன்னது மறக்காது.

என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்
அது நம் காதல் தானே
நண்பா.

நீ இல்லாமல் 
எனக்கேது காதல்?

Friday, January 27, 2012

மகள்

காலை நிலா
இரவு சூரியன்
இயற்கையின் ஆச்சர்யம்
எங்கள் வீட்டு அதிசயம்

சுடாத வெளிச்சம் 
நடுங்காத குளிர்
வானத்து முகில்
முகில் தெளிக்கும் மழை
மழை நனைக்கும் நிலம் 
நிலத்து நந்தவனம்
நந்தவன தென்றல்
தென்றலின் தீண்டல்

விரிவாக சொன்னாலும் 
நடமாடும் ஐம்பூதம்

பொக்கை வாய் சிரிப்பு
எட்டிப் பார்க்கும் பற்கள்
பொய் பேசாத நா
சாயம் பூசாத இதழ்
வஞ்சம் இல்லாத கண்
ஜப்பானிய மூக்கு
வடஇந்திய தமிழ் 

தடுமாறும் நடை
நிறைவான எடை
இல்லாத இடை
தேவதையாய் உடை

கால் நூற்றாண்டு கனவு
வருத்தாத நினைவு
ஒறுத்தாத உறவு

அடிக்கடி மாறாத  
என் மின்னஞ்சலின்
தற்போதைய திறவுசொல்


நானும் வந்துட்டேன் 
mindla வச்சிருக்கேன் 


ஏன் இப்படி

செல்லமே

Thursday, January 26, 2012

அண்ணா

என் தந்தை விந்திட்ட,
எனக்கு முன்னரே 
மண் பார்த்த
மூத்த விதைகள் 

என் தாயின்
தொப்புள் கொடியின்
முதல் வரிசை மலர்கள்

பத்து மாதம் வாடகையின்றி
நான் இருந்த வீட்டின் 
மூத்த குடிகள் 

தாய்ப்பாலை நானும் குடிக்க 
மிச்சம் வைத்த நல்லவர்கள் 

பண்டம் தின்ன 
சண்டை வந்தாலும்
கடைக்குட்டி என் பங்கை
குறைக்க முயலாதவர்கள்
முடியாதவர்கள்

நண்பர்கள் நான் தேட
வாய்ப்பு தராத நண்பர்கள் 

அண்ணன் என்று நான் 
அழைக்காத போதும்
படைக்கு அஞ்சாதவர்கள்,
என் தமயன்கள்.


அவள்

அன்பின் அகரம்
அடக்கத்தின் உயரம்

"மிச்ச(ம்)"த்தில் உச்சம்
அச்சத்தில் துச்சம்

கடவுளின் அடியாள்
கணவனுக்கும் அடியாள்

மகளின்றி வருந்தியவள்
வருத்தத்தில் மெலிந்தவள்

பேத்தியை தோழியாக்கியவள்
தோழியே வாழ்வாக்குபவள்

தோற்க பழகியவள்
தோற்றே வென்றவள்








அவரின் அடையாளம்

கறுப்பு தோல்
வெள்ளை வேட்டி 

சுருண்ட முடி
முறுக்கிய மீசை

கதரில் உடை
கம்பீரமாய் நடை 

1960's Royal Enfield

கொஞ்சம் கோபம்
மிஞ்சும் பாசம்

பல சமயம் "ஆணை"யர்
புரிய வைத்தால் ஊழியர்












Thursday, January 19, 2012

தோற்க கற்றவள்

கிடைத்ததை விரும்பக் கற்றவள் 
விரும்பியது கிடைத்தால் 
அவள் உள்ளத்து உணர்வு? 

புரிந்தது இன்று . 

"அப்பம்மா" என்றே
அழைத்த பேத்தியை
அன்புடன் அள்ளிய என் 
அம்மாவைக் கண்டதும்.

  




Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...